தமிழ்நாடு

கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2025-01-07 11:39 IST   |   Update On 2025-01-07 11:39:00 IST
  • கவர்னர் உரை புறக்கணிப்புக்கு கண்டனம்.
  • திரளான தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார்.

அப்போது தேசிய கீதத்தை முதலில் பாட வில்லை என்று குற்றம்சாட்டி சட்டசபையில் இருந்து வெளியேறினார். மேலும் கவர்னர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட சமூக வலைதள பதிவில் சட்டசபை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுவதாகவும் விமர்சித்து இருந்தார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் கவர்னரை கண்டித்தும் கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று (17-ந்தேதி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சென்னை

அதன்படி ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சின்னமலையில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கவர்னருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்ட துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். இதில் சுப.வீரபாண்டியன் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், அவைத் தலைவர் துரை சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. து.மூர்த்தி, பொருளாளர் விஸ்வநாதன், படப்பை மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் மு.ரஞ்சன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு..க. சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே அவைத்தலைவர் திராவிட பக்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் டாக்டர் குமரன், முன்னாள் நகரமன்ற தலைவர் பாண்டியன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜேந்திரன், பூண்டி அன்பரசு, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மோதிலால், திலீபன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திரளான தி.மு.க.வினர் கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News