பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறினால் பட்டம் வழங்கும் உரிமை பறிபோகுமா? ராமதாஸ் கண்டனம்
- மானியக்குழு அதன் அத்துமீறலை கைவிட வேண்டும்.
- திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் பட்டப்படிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
துணைவேந்தர் நியமனம் குறித்து மானியக்குழு வகுத்துள்ள வரைவு விதிகள் அனைத்தும் நியாயமற்றவை; அதுமட்டுமின்றி அவை மானியக்குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டவை ஆகும். துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேர்வுக்குழுவை இனி பல்கலைக்கழக வேந்தர்களான ஆளுனர்கள் தான் நியமிப்பார்கள்; தேர்வுக்குழுவில் ஆளுனரின் பிரதிநிதி, மானியக்குழுவின் பிரதிநிதி, பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் பிரதிநிதி ஆகிய மூவர் இடம்பெறுவர் என்றும் மானியக்குழு விதிகளில் கூறப்பட்டுள்ளது.
துணைவேந்தர் நியமன விதிகளை விட, பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்தில் மானியக் குழு வகுத்துள்ள விதிகளை பின்பற்ற மறுக்கும் கல்வி நிறுவனங்களுக்கான தண்டனைகள் தான் மிகக் கொடியவை. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும், மானியக்குழுவின் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும், திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் பட்டப்படிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும். மானியக்குழு அதன் அத்துமீறலை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.