கோவை வெள்ளியங்கிரியில் மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு
- நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர்.
- உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
வடவள்ளி:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மலைகோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.
இந்த மலையில் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை துருவம் பகுதியை சேர்ந்தவர் சிவா(வயது43). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
சிவா, தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக திருவண்ணாமலையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தார்.
நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர். 6 மலைகளை கடந்து 7-வது மலைக்கு சென்ற அவர்கள், அங்கு சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம் முடித்த பின்னர் இன்று காலை அவர் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 3-வது மலையில் வந்தபோது, சிவாவுக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் அப்படியே மயங்கினார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை கீழே தூக்கி வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் சிவாவை ஏற்றினர்.
அப்போது ஆம்புலன்ஸ் உதவியாளர் அவரை பரிசோதித்தபோது, சிவா உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் ஆஞ்சியோ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த சிவா, பெங்களூருவில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.