தமிழ்நாடு

சென்னையில் வயிற்றுபோக்கு.. மதுரையில் வாக்கிங் நிமோனியா.. அச்சப்பட தேவையில்லை- அமைச்சர் தகவல்

Published On 2024-12-31 06:28 GMT   |   Update On 2024-12-31 06:28 GMT
  • மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது.
  • மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது.

சென்னை:

பருவமழை காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம். எனவே, இந்த காலகட்டங்களில் பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் பருவமழை தொடங்கி முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் வழக்கமான நோய் தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன.

சென்னையில் வடகிழக்கு பருவமழையால் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை போன்றவற்றால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடல் நல பிரச்சினைகளால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 40 சதவீதம் பேர் இத்தகைய பாதிப்புகளால் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தை பாதிக்கும் இ-கோலி எனப்படும் பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பாக்டீரியாக்கள் அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீர், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் புகுந்து விடுவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என்று மருத்துவமனைக்கு வரும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மைக்ரோ பிளாஸ்மா நிமோனியா, கிளாடிமியா நிமோனியா, லெஜியோனல்லா வகை பாக்டீரியாக்கள்தான் காய்ச்சலை உருவாக்குகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் வழியே இந்த வகை பாக்டீரியாக்கள் பரவுவதாக கூறப்படுகிறது.

இந்த நோய் பெரியவர்களை தாக்கினால் ஆபத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்தும். சிறியவர்களை தாக்கினால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் ஆபத்து குறைவு என்கிறார்கள்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, மழைக்காலங்களில் நோய் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்தான். பொது சுகாதாரத் துறையினரின் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

Tags:    

Similar News