மாணவி விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது வெட்கக்கேடானது- ஜி.கே.வாசன்
- அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.
- என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன்.
திருச்சி:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் தமாகவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025-ம் ஆண்டில் தொடர் களப்பணிகள் நடைபெறும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான். மதுபான கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக் கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
தி.மு.க. அரசின் அவலங்களை கண்டித்து போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை கூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன். நடவடிக்கை எடுப்பேன். ஆதரவாக இருக்க மாட்டேன்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. "ஒத்த கருத்து" என்பது தேர்தலில் வெற்றி பெறுவது தான். புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும்.
பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.