திருச்சியில் 31-ந்தேதி அ.தி.முக. கண்டன ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- திருச்சி ஜங்ஷன் அருகில் அமைந்துள்ள மற்றொரு பாலமும் அகற்றப்பட்டுவிட்டது.
- கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவரும் 3 முதல் 5 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் உள்ள மாரீஸ் பாலத்தை அகற்றுவதற்காக, கடந்த மார்ச் மாதம் முதல் அப்பாலத்தின் மீதான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இன்று வரை அந்தப் பாலம் அகற்றப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதே போல், திருச்சி ஜங்ஷன் அருகில் அமைந்துள்ள மற்றொரு பாலமும் அகற்றப்பட்டுவிட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவரும் 3 முதல் 5 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. அரசைக் கண்டித்தும்; நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அ.தி.மு.க. திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.