பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
- மருத்துவ முகாமில் பெண்கள் 300 பேருக்கு 11 பொருட்கள் அடங்கிய ஆரோக்கிய பெட்டகமும் வழங்கப்பட்டது.
- இன்றைய ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அவரது உருவப்படத்தை முக்கிய பகுதிகளில் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அன்னதானம், ரத்ததானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.
சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித்தலைவியின் புகழ் ஓங்குக, எடப்பாடி வாழ்க என கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் வாணவேடிக்கையுடன் பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை முழங்க எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல் பிரதியை பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்காக அ.தி.மு.க. தலைமைக்கழக வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த மேடையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்த 77 கிலோ பிரமாண்ட கேக்கினை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். அதை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார்.
அதனை தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
ஜெயலலிதா பேரவை சார்பில் ஏழைகள் 5 பேருக்கு தையல் எந்திரங்கள், 5 பேருக்கு இட்லி பாத்திரங்கள், 2 பேருக்கு கிரைண்டர், 5 பேருக்கு இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 50 பேருக்கு வேட்டி, 50 பெண்களுக்கு சேலை ஆகியவற்றையும் வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாமில் பெண்கள் 300 பேருக்கு 11 பொருட்கள் அடங்கிய ஆரோக்கிய பெட்டகமும் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக தனி கவுண்டர் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு எடப்பாடி பழனிசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி என்ற அணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன் லோகோவையும் வெளியிட்டார்.
அதன்பிறகு அ.தி.மு.க. தொழில்நுட்ப அணி சார்பில் உருவாக்கப்பட்ட 'அம்மா சொல் அல்ல செயல்' மற்றும் 'அம்மா 77' ஆகிய 2 ஹேஷ்டேக்குகளையும் வெளியிட்டார்.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைய தலைமுறையினரை இணைத்து செயல்படுத்தவும் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி தொடங்கப்பட்டுள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்தை உருவாக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் இந்த அணி உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த அணியில் இடம் பெறுபவர்கள் ஒரு உணர்வோடு விளையாடும் போது மத நல்லிணக்கம் ஏற்படுகிறது. இதனை தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா அவரது ஆட்சி காலத்திலேயே மாநில பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து எங்களது ஆட்சிக்காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் தற்போது அது செயல்படுத்தப்படாததால் மீண்டும் அதனை செயல்படுத்த வேண்டும்.
இன்றைய ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்களே பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்கள்.
வேலியே பயிரை மேய்கின்ற கதை போல ஒரு சில ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரமாக சென்னை, கோவை போன்ற நகரங்கள் இருந்தது. குழந்தைகள், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. பெண்கள் சமூக பொருளாதார மேம்பாடு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், சானிடரி நாப்கின் வழங்குதல், மகளிர் சுய உதவி குழுக்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனியறை, இலவச மடிக்கணினி சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உருவாக்கி தந்தவர் ஜெயலலிதா.
அதனால்தான் அவரை எல்லோரும் வெற்றி பெண்மணி என்று கூறினார்கள். அம்மாவின் அரசு பல்வேறு உதவிகளை செய்து வந்தது போல் இந்த அரசும் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து அருகில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்துக்கு சென்றார். அங்கு இளம் விளையாட்டு வீரர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் எப்படி செயல்படவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.