ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
- ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு.
- ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை.
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கடிதம் அளித்துள்ளனர்.
அதில், தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிலுவையில் இருக்கின்றன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இனியும் பொறுமை காக்க சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.