நாளை ஆர்ப்பாட்டம் நடப்பது உறுதி.. ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
- அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
- அரசு எங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் வாக்குறுதியை அளித்தது. இருந்தபோதும் அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி நாளை மாநில அளவிலான போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர்கள் தலைமையிலான குழு அண்மையில் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்ககளுடன், இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது; 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினோம். அரசு எங்களின் கோரிக்கைகளை நிராகரிக்கவில்லை. 4 வாரங்கள் அவகாசம் கேட்டுள்ளனர்.
முதல்வர் எங்களது கோரிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுத்து இருப்பதாக அமைச்சர்கள் குழுவினர் எங்களிடம் தெரிவித்தனர். எங்கள் கோரிக்கை குறித்து தீர்வு கிடைக்காத பட்சத்தில் வேறு வழியின்றி இந்த போராட்டக்களத்துக்கு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.
நாளை(பிப்.25) போராட்டம் நடைபெறும். மறியல் போராட்டமாக இல்லாமல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக நடக்க முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.