மேட்டூர் அனல் மின் நிலைய விபத்து.. சிக்கியவர்களை மீட்க துரிதமாக செயல்படுங்கள் - EPS வலியுறுத்தல்
- பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்.
- மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் காயமுற்ற ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனல் மின் நிலைய விபத்து குறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம் அடைந்ததாகவும் இருவர் காணவில்லை என்றும் ஊடகத்தில் வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது."
"காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்தில் சிக்கியுள்ள இருவரையும் மீட்க துரிதமாக செயல்படுமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.