தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தி.மு.க. - நா.த.க. வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்

Published On 2025-01-17 13:18 IST   |   Update On 2025-01-17 13:52:00 IST
  • தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே இருமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
  • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டன. ஆனால் அதே சமயம் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதில் அரசு விடுமுறை நீங்கலாக கடந்த 10-ந்தேதி, 13-ந்தேதி, 17-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி 3 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி 6 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 9 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.



இதையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வழக்கத்தை விட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி கட்சியினருடன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவரைத் தொடர்ந்து 12.30 மணி அளவில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஈரோடு அரசு மருத்துவமனை தேர்தல் பணிமனையிலிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மேலும் சில சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் அறிவிக்கப்படுகிறது.

வருகிற பிப்ரவரி 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து 8-ந்தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 96 வேட்பாளர்கள் 121 வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 38 மனுக்கள் தள்ளுபடி ஆகி 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. 6 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு 77 பேர் களத்தில் இருந்தனர்.

ஆனால் இந்த முறை முக்கிய எதிர் கட்சிகளான அ.தி.மு.க, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை புறக்கணித்து உள்ளதால் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே இருமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுபோக ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த ஒரு பரபரப்பு இன்றி உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார்.

தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து தி.மு.க.வினர், அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடு வீடாகச் சென்று தி.மு.க.வின் மக்கள் திட்டங்களை கூறி உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதைப்போல் விசைத்தறி கூடங்களுக்கு நேரடியாக சென்று நெசவாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதைப் போல் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இனி வரக்கூடிய நாட்களில் மற்ற அமைச்சர்கள் பிரசா ரம் மேற்கொள்ள உள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News