அதிகரித்து வரும் தற்கொலைகளால் சீர் குலையும் குடும்பங்கள்
- இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
- சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
திருச்சி:
இன்றைக்கு இயற்கை மரணங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்து விட்டன. கோழைத்தனமும், தாழ்வு மனப்பான்மையும் ஒருவரை இந்த துயர முடிவுக்கு தள்ளி விடுகிறது.
முன்பெல்லாம் தற்கொலைக்கு காதல் தோல்வி, கடன் பிரச்சனைகள், தீராத வியாதி போன்ற வலுவான காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் இன்றைக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.
இதில் வயது வரம்பு இல்லை. 10 வயது முதல் வயதான முதியவர் வரை வயது வித்தியாசம் இன்றி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 54 ஆண்டுகளில் 17.56 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உள்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக தற்கொலைகளின் எண்ணிக்கை சகட்டுமேனிக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பல பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்கிறார்கள்.
குடும்பத் தலைவரின் தற்கொலை முடிவு ஏதும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகளையும் கொன்று விடுகிறது. இது வேதனையின் உச்சமாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி பெல் நிறுவன பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு அலுவலக அறையில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவருக்கென்ன ராஜா மாதிரி என்பார்களே அந்த இடத்தில் தான் பெல் அதிகாரியும் இருந்தார். மத்திய அரசு பணி, மனைவி தனியார் பள்ளி ஆசிரியை, புகழ்பெற்ற என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் ஒரே மகள். அவருக்கு என்ன பிரச்சனையோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் குடும்ப அளவில் பெரிய கடன் பிரச்சனைகள் இருப்பதாக தெரியவில்லை.
இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 நாட்களில் சென்னை திருமங்கலத்தில் டாக்டர், தனது வழக்கறிஞர் மனைவி மற்றும் 2 மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானது. இவர் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதேபோன்று சில வாரங்களுக்கு முன்பு சேலம் தொழிலதிபர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுக்கோட்டை அருகே காரில் குடும்பத்தோடு வந்து, தன்னை மாய்த்துக் கொண்டதுடன் தனது வயதான தாய், மனைவி, மகன், மகள் அனைவரையும் விஷம் அருந்த செய்து அனைவரும் காருக்குள்ளேயே பிணமாக மீட்கப்பட்டனர்.கரூரில் கடந்த மாதம் ஒரு தொழிலாளி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி இறந்த துக்கம் தாங்கமுடியாத கணவர் தனது 19 வயது மகள், 14 வயது மகன் ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு நாளும் பொழுதும் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் இறைவன் அழைக்கும் வரை வாழ்ந்து விட வேண்டும்.
இதுபோன்ற துயர முடிவுகளுக்கு நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாக, தற்கொலைதான் என இவர்களால் நம்பப்படுகிறது என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தமும் மற்றொருவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தியும் தற்கொலையை நோக்கித் துரத்துகிறது.
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற ஏமாற்றம், வேலையின்மை, கடன், தொழிலில் நஷ்டம், தோல்வி பயம், காதல் தோல்வி, குற்றவுணர்வு, அவமானம், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம், போதைக்கு அடிமையாதல், கல்விச் செலவு, நோய், மருத்துவச் செலவு, வரதட்சிணைப் பிரச்சினை, விபத்து, விவாகரத்து, உறவுகளைப் பிரிந்துவிட்டோம் என்ற ஏக்கம், பாலியல் வன்கொடுமை, முறையற்ற கர்ப்பம், குழந்தையின்மை, சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வு, மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்ற எண்ணம், தேர்வில் தோல்வி, உடல்ரீதியான குறைபாடு, எதிர்பாராத செலவுகள், கந்துவட்டிக் கடனை நோக்கிக் கை நீட்டியதன் விளைவு என எத்தனையோ காரணங்கள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.
சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் மட்டுமே தற்கொலை செய்துகொள்வதில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்களும் இருப்பவர்களும், பிரபலங்களும் பலருக்குத் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியவர்களும்கூட தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
சமூகச் சூழலின் நெருக்குதலைச் சமாளிக்க முடியாமல் பெரியவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். கூடவே எந்தப் பாவமும் அறியாத தங்களுடைய குழந்தைகளையும் சேர்த்து, தற்கொலை என்ற பெயரில் கொலை செய்துவிடு கிறார்கள். இவற்றுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, பாரம்பரியமான நம்முடைய கூட்டுக் குடும்ப முறை முற்றிலுமாக அழிந்துபோனதுமாகும். பெரியவர்கள், சிறியவர்கள் என சகல வயதினரும் உறவுகளும் கலந்து வாழும்போது எந்தவொரு பிரச்சினை என்றாலும் விவாதமும் பரஸ்பர ஆற்றுப்படுத்தலும் எளிதாக இருந்தது. பெற்றோர்கள் நமக்குப் பாரம் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் நம்முடைய பொக்கிஷம் என்ற எண்ணம் இன்றைய இளைய தம்பதியினரிடையே உருவாக வேண்டும். இளமை என்ற இறுமாப்பைத் தளர்த்தி முதுமை பற்றிய தெளிவான அறிவைப் பெற வேண்டும்.
உண்மையான வாழ்க்கையின் உன்னதம் எது என்பதை அறியாமல் போனதும் எது வாழ்க்கை என்பதை ஒவ்வொரு வரும் தெளிவாகப் புரிந்து அறிந்துகொள்ளாததுமே தற்கொலை - கொலைகள் பெருகக் காரணங்களாக அமைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆக வாழ்க்கை வாழ்வதற்கே.... சாவதற்கல்ல...