எரிவாயு குழாய் திட்டத்தை மாற்றக்கோரி பல்லடத்தில் 36-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
- புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
- விவசாயிகள் போராட்டம் நடத்தாததின் விளைவு மீண்டும் விளைநிலத்திலேயே குழாய் பதிப்பது என்பது அதிகாரிகளின் திட்டமிட்ட சதியாகும் என்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், கோடங்கி பாளையம் கிராமங்களில் ஐ.டி.பி.எல். எரிவாயு குழாய் திட்டத்தை விவசாய நிலங்களில் அமைக்காமல் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் 36-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 1999-ம் ஆண்டு பெட்ரோ நெட் சி.சி.கே. திட்டத்திற்கு அனுபவ உரிமை எடுப்பு செய்ததை குறிப்பிட்டு தற்போது ஐ.டி.பி.எல். திட்டத்தின் கீழ் அதே இடத்தில் எண்ணெய் குழாய்களை பாரத் பெட்ரோலிய நிறுவனம் பதித்து வருகிறது. அதாவது பழைய திட்டத்திற்கு பெறப்பட்ட அனுமதியை வைத்து கொண்டு புதுத்திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக எண்ணெய் குழாய்களை பதித்து வருகின்றனர்.
அனைத்து வகையான எரிவாயு மற்றும் பெட்ரோலிய குழாய் பதிப்பு என்பது சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது, எப்படி ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு முன் கோவை முதல் கரூர் வரை பதிக்கப்பட்ட குழாயின் அருகிலேயே மீண்டும் 70 கிலோமீட்டர் அளவிற்கு மற்றொரு பெட்ரோலிய குழாய் அமைக்க வேலை செய்து வருகின்றனர்.
கோவை முதல் கர்நாடகாவின் தேவன கொந்தி வரை பெட்ரோலிய குழாய் கொண்டு செல்லும் திட்டத்தில் பெருமளவில் சாலையோரமாக பதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆனால் கோவையில் இருந்து முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டர் ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் வழியே மீண்டும் பதிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அன்றே விவசாயிகள் போராட்டம் நடத்தாததின் விளைவு மீண்டும் விளைநிலத்திலேயே குழாய் பதிப்பது என்பது அதிகாரிகளின் திட்டமிட்ட சதியாகும் என்றனர்.