தமிழ்நாடு

அவசியமற்ற கொடுமையான அடக்குமுறை: சீமான் கண்டனம்

Published On 2024-12-31 14:07 GMT   |   Update On 2024-12-31 14:07 GMT
  • பிரியாணி கடை வைத்திருக்கும் ஒருவருக்கு, உள்ளே சென்று மிரட்டி விடலாம் என்ற துணிவு எங்கிருந்து வருகிறது.
  • அரசியல் பின்புலம் அல்லது அதிகார பின்புலம் இல்லாமல் துணிவு எப்படி வருகிறது?.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த வந்த சீமான் காரில் இருந்து இறங்குவதற்கு முன்னதாகவே போலீசார் கைது செய்தனர். மேலும், செய்தியாளர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

கைது செய்யப்பட்ட சீமான் மாலையில் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-

ஊடகத்தை சந்திக்கக் கூடாது என்பது அவசியமற்ற கொடுமையான அடக்குமுறை. யாரும் பேசக்கூடாது என மறக்கடிக்கப்படுவது என்பது ஏற்புடையது அல்ல. மேலும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பிரியாணி கடை வைத்திருக்கும் ஒருவருக்கு, உள்ளே சென்று மிரட்டி விடலாம் என்ற துணிவு எங்கிருந்து வருகிறது. இது எவ்வளவு பெரிய குற்றம் என்று அவருக்குத் தெரியுமா? தெரியாதா?

ஒரு பின்புலம் இல்லாமல் இந்த குற்றத்தை செய்ய ஒரு தனிமனிதருக்கு துணிவு எப்படி வரும். அரசியல் பின்புலம், அல்லது அதிகார பின்புலம் இல்லாமல் எப்படி வருகிறது?. நமக்கு தெரிந்தே இரண்டு நிகழ்வு நடந்துள்ளது. இதற்கு முன்னாடி எத்தனை?.

நடந்துச்சி, வருந்துகிறோம், இனிமேல் இது போன்று நடக்காது, அச்சத்தை கைவிடுங்கள், இது தவறுதான், இதற்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுப்போம் என ஏதாவது ஒன்று பேசினால் நமக்கு ஆறுதலாக இருக்கும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதுபோன்ற சம்பவங்களுக்கு இவர்கள் கொடுத்த குரல்கள் என்ன?. 13 வயது சிறுமி சம்பவத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதிகாரத்தை கைப்பற்றினால் அப்படி செய்வோம், இப்படி செய்வோம். என முதலமைச்சர் சொன்னார். இப்போ என்ன செய்கிறீர்கள்?

இவ்வாறு பேட்டியின்போது சீமான் தனது கண்டனைத்தை வெளிப்படுத்தினார்.

Tags:    

Similar News