தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் முறையாக தி.மு.க.வுடன் சீமான் கட்சி நேரடி போட்டி

Published On 2025-01-13 10:51 IST   |   Update On 2025-01-13 12:16:00 IST
  • தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
  • தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன.

இதனால் தி.மு.க.வுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இதுவரை பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் இது போன்று பிரதான கட்சியுடன் அந்த கட்சி நேரடி மோதலில் ஈடுபட்டது இல்லை. தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.

தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அப்போதெல்லாம் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று போட்டியை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியில் இருந்து பின் வாங்கியதால் தி.மு.க. வேட்பாளருக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் இடையே மட்டுமே போட்டி ஏற்பட்டிருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்பர பரப்பின்றியே காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதன் மூலமாகவும், முக்கிய எதிர்க்கட்சிகள் களத்தில் இல்லாததாலும் தி.மு.க. வேட்பாளரை இதுவரை இல்லாத வகையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்று தி.மு.க. தலைவர்கள் நம்புகிறார்கள்.

இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அது போன்று யாரும் பிரசாரம் செய்ய செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் உள்ளூர் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மட்டுமே அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News