3-வது மொழியை படிக்க தடை செய்தால் மற்ற மாநிலங்களில் தமிழை எப்படி படிப்பார்கள்- ஜி.கே.வாசன் கேள்வி
- தமிழ் மொழியை முதல் மொழி மூத்த மொழி என்று பெருமையாக கூறுகின்றோம்.
- சமூக வலைதளங்களில் வரும் சர்ச்சைக்குரிய பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
மதுரை:
மதுரை திருநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் மொழியை முதல் மொழி மூத்த மொழி என்று பெருமையாக கூறுகின்றோம். அப்படி என்றால் உலக அளவில் தமிழ் மொழியை பரப்புவது நமது கடமையாகும். ஆனால் தமிழகத்தில் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை உயர்த்திக் கொள்ள விருப்பப்பட்ட 3-வது மொழியை படிப்பதற்கு அரசே தடையாக இருந்தால் நமது செம்மொழி தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் படிக்க அவர்கள் எப்படி முன் வருவார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கி விட்டது. நேற்று சென்னையில் முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதேபோல தமிழகம் எங்கும் கூட்டங்கள் நடத்த உள்ளோம்.
கூட்டம் முடிந்தவுடன் எங்கெங்கு தொய்வாக உள்ளதோ? அங்கு வலு சேர்க்கும் முயற்சி எடுக்க உள்ளோம். அதையடுத்து கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்.
சமூக வலைதளங்களில் வரும் சர்ச்சைக்குரிய பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இதனை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் என்பது ஒரு வரலாறு அவரது ஆட்சியை யாரும் மறைக்கவும் முடியாது. திரும்பக் கொண்டு வரவும் முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.