பொங்கல் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது- விசாரணைக்கு ஐகோர்ட் மறுப்பு
- அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் பொங்கலுக்கு முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.
- பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சி தான்.
சென்னை:
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்கவில்லை.
இதுகுறித்து பொங்கலுக்கு முன்பே தகவல் வெளியானது. இதையடுத்து, பொங்கல் பரிசுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த வக்கீல் ஏற்காடு மோக்ன தாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வராததால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வில் பொங்கலுக்கு முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரிக்கை செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் வக்கீல் மோகன்தாஸ் முறையிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சி தான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. ரொக்கம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர்.