அண்ணாமலையை கண்டித்து முட்டையடி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர்
- அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
- முட்டைகளை உடைக்கும் போதும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஈடுபட்டார்.
அய்யம்பேட்டை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அண்ணாமலையின் இந்த நூதன போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். மேலும், இந்த போராட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கேலி, கிண்டல்கலும் எழுந்தன.
இந்த நிலையில், அண்ணாமலையை கண்டித்து தி.மு.க. கவுன்சிலரின் கணவர் ஒருவர் அதைவிட நூதன போராட்டத்தில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதன் விபரம் வருமாறு:-
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் 3-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாண்டியம்மாள். இவரது கணவர் ராம் பிரகாஷ். தி.மு.க.வை சேர்ந்தவர். இவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்து கொண்ட சம்பவம் வீரத்திற்கு புகழ்பெற்ற தமிழகத்தை இழிவுபடுத்தும் செயல் எனக்கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன்படி, இவர் அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். பின்னர், தான் எடுத்துவந்த சுமார் 150 முட்டைகளை எடுத்து, அதனை தனக்குத்தானே தலையில் அடித்து உடைக்கத் தொடங்கினார். முட்டைகளை உடைக்கும் போதும் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஈடுபட்டார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் போராட்டம் நடைபெற்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.