தம்பி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி குடுங்கன்னு கலைஞரிடம் நான்தான் சொன்னேன் - ராமதாஸ்
- எங்கள் விமர்சனங்களுக்கு கூட கலைஞர் நாசுக்காக பதில் கொடுப்பார்.
- சிறையின் உள்ளே அனுப்பவில்லை என்றால் இங்கேயே நாற்காளியை போட்டு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து விடுவேன் என்றேன்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், தம்பி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்கன்னு கலைஞரிடம் நான் தான் சொன்னே்" என்று கூறினார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், " திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணியில் இருந்தபோது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்டனர். "நீங்கள் பாமகவுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். ஆனால் ராமதாஸ் தினமும் உங்களை விமர்சிக்கிறாரே என்று கேட்டனர். அதற்கு அவர் தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என்றார்.
எங்கள் விமர்சனங்களுக்கு கூட கலைஞர் நாசுக்காக பதில் கொடுப்பார்.
கலைஞரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தபோது, நான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தேன். அப்போது, ஜி.கே.மணியிடம் ஒரு நாற்காலியை காரில் வைக்கச் சொல்லி சிறைக்கு சென்றேன். ஆனால், அங்கு உள்ளே விடவில்லை. சிறையின் உள்ளே அனுப்பவில்லை என்றால் இங்கேயே நாற்காளியை போட்டு அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து விடுவேன் என்றேன். பிறகு, உள்ளே விட்டனர்.
உள்ளே கலைஞரை சந்தித்தேன். அவர் இது எல்லாம் உங்களால் தான் நடந்தது என்றார். அவருடன் கூட்டணி வைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்ற அர்த்தத்தில் கூறினார்.
கூட்டணி பொதுக்கூட்டம் ஒன்றில், ஏன் இவ்ளோ பாரம் வைத்திருக்கிறீர்கள், துணை முதலமைச்சர் பதவியை தம்பி ஸ்டாலினுக்கு கொடுங்கள் என்று அப்போது கலைஞரிடம் நான் தான் சொன்னேன்.
பலமுறை ஸ்டாலினிடமும் சொல்லி இருக்கிறேன். நான்தான் அப்பாவிடம் பதவி வழங்க கூறினேன் என்று. அதற்கு ஸ்டாலின், "ஆமாம் ஐயா நீங்கள் தான் சொன்னீர்கள்" என்று கூறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.