தமிழ்நாடு

தனி ரேசன் கார்டு கோரி விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2025-01-02 07:43 GMT   |   Update On 2025-01-02 07:43 GMT
  • அதிகாரிகள் பரிசீலித்து முறையாக புது கார்டு வழங்கி வருகின்றனர்.
  • புது ரேசன் கார்டு வழங்குவதை சில மாதத்துக்கு அரசு நிறுத்தியது.

சென்னை:

தமிழ்நாட்டில் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு குடும்பத்தில் திருமணம் ஆகும் தம்பதியினர் தனிக் குடித்தனம் சென்றால் பழைய முகவரியில் உள்ள பெயரை நீக்கி சான்றிதழ் வாங்கி அதை இணைத்து விண்ணப்பம் செய்வது நடைமுறை வழக்கமாகும்.

இவற்றை அதிகாரிகள் பரிசீலித்து முறையாக புது கார்டு வழங்கி வருகின்றனர்.

ஆனால் சில இடங்களில் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனியாக ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக சமையல் எரிவாயு இணைப்பு இல்லாவிட்டால் அதை அதிகாரிகள் நிராகரித்து விடுகின்றனர்.

அந்த வகையில் 2.65 லட்சம் பேர் புது கார்டு கேட்டு விண்ணப்பம் செய்திருந்ததில் 1.36 லட்சம் கார்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேசன் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்று. ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி அரசின் நிதி உதவியை பெறுவதற்கும், வெள்ள நிவாரண உதவியை பெறுவதற்கும் இது முக்கியமாக பயன்படுகிறது.

சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், கூட ரேசன் கார்டு தேவைப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் இப்போது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேசன் கார்டு முக்கியம் என்பதால் அதற்காகவே புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதனால்தான் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று தகுதியானவர்களுக்கு மட்டும் புது கார்டு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அதனால் தான் புது ரேசன் கார்டு வழங்குவதை சில மாதத்துக்கு அரசு நிறுத்தியது. இப்போது மீண்டும் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் தற்போது 2.25 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றதில் இருந்து இதுவரை 16.3 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News