null
இசை ஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை- இயக்குநர் அமீர்
- இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சனாதனம் தலை விரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்?
மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே சாமி தரிசனம் செய்ததாகவும், கோவில் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்காதது தொடர்பாக இயக்குநர் அமீர் வாட்சப்பில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்தியத் திரு நாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசை ஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை. சனாதனம் தலை விரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்?" என்று தெரிவித்துள்ளார்.