தமிழ்நாடு

மாவட்ட தலைநகரங்களில் 23-ந்தேதி உண்ணாவிரதம்- ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

Published On 2025-03-15 07:57 IST   |   Update On 2025-03-15 07:57:00 IST
  • பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
  • அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்.

சென்னை:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்திலும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்துசெய்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதேபோல், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News