தமிழ்நாடு

சென்னை மாநகரம் உலகத்திற்கே முன்னோடியாக திகழ்கிறது- ஜோதிர் ஆதித்ய சிந்தியா புகழாரம்

Published On 2025-02-06 07:49 IST   |   Update On 2025-02-06 07:49:00 IST
  • சென்னை ஸ்ரீபெரும்புதூர், மோட்டார் வாகன உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களும் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளன.

சென்னை:

வடகிழக்கு மாநிலங்களில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மத்திய வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான அமைச்சகம் சார்பில் வர்த்தகம் மற்றும் கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் அந்த துறைக்கான மத்திய மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை நகரின் வளர்ச்சி மிக அபரிமிதமானது. சென்னை, இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் உலக அளவில் மிக சிறப்பாக செயல்படுகிறது. ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.

சென்னை ஸ்ரீபெரும்புதூர், மோட்டார் வாகன உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் 30 சதவீதம் அளவுக்கு அதன் பங்கு உள்ளது. ஏற்கனவே இருந்த டெட்ராய்ட் நகரம் இப்போது காணாமல் போய் விட்டது. சென்னை தான் உலகின் புதிய டெட்ராய்ட் நகரமாக உருவெடுத்துள்ளது.

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் உலகளவில் சிறப்பாக செயல்படுகிறது. சென்னையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் ஆண்டுக்கு திறன் மிகுந்த 50 ஆயிரம் என்ஜினீயர்களை உருவாக்குகிறது. மிக முக்கியமாக அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சென்னை தன்னிறைவு அடைந்துள்ளது. அதிகளவில் ரிங் ரோடும், மெட்ரோ ரெயிலும் உள்ளது. நகர வளர்ச்சியில் சென்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு 'ரோல் மாடல்' ஆக இருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களும் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளன. அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் 15 ஆயிரத்து 600-ம், 50 ஆயிரம் கிலோமீட்டருக்கு கிராம சாலைகளும் போடப்பட்டுள்ளன.

அதேபோல் 9 விமான நிலையங்கள், 17 விமான நிலையங்களாகி உள்ளது. ரூ.81 ஆயிரம் கோடி செலவில் 19 ஆயிரத்து 109 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 65 ஆண்டுகள் பெறாத இந்த வளர்ச்சியை, வடகிழக்கு மாநிலங்கள் 10 ஆண்டுகளில் பெற்று இருப்பதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News