ஈரோடு கிழக்கு தொகுதியில் 67.97 சதவீதம் வாக்குப்பதிவு: எந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடை பெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கும் வகை யில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி யிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவிகள், ஒரு வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.
காலை நேரம் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் மதிய நேரம் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சிறிது சுனக்கம் ஏற்பட்டது. பின்னர் மாலை நேரம் மீண்டும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அடிப்படையில் வாக்குப்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணி அளவில் 10.95 சதவீதமும், 11 மணி அளவில் 26.03 சதவீதமும், மதியம் 1 மணி அளவில் 42.41 சதவீதமும், மதியம் 3 மணி அளவில் 53.63 சதவீதமும், மாலை 5 மணி அளவில் 64.02 சதவீதமும் பதிவானது.
அதைத்தொடர்ந்து இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலை விட 7 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. 2023-ம் ஆண்டு தேர்தலில் 74.69 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது.
வாக்குப்பதிவு முழுமை அடைந்தவுடன், ஓட்டு போட்ட வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. பதிவு எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர மின் இணைப்புகள் முறைப்படி துண்டிக்கப்பட்டன.
பின்னர் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி. பேட் கருவிகள் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து மண்டல தேர்தல் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு எந்திரங்களை பெற்றுக் கொண்டனர். அப்போது படிவங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டலம் வாரியாக சேகரிக்கப்பட்டன.
பின்னர் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்தில் இருந்தும் வாக்குபதிவு எந்திரங்கள் சித்தோடு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் எண் வரிசைப்படி எந்திரங்கள் வைக்கப்பட்டன.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகமான ஸ்ரீகாந்த், தேர்தல் பொது பார்வையாளர் ஆகிய முன்னிலையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு அறையின் உள்ளேயும், வெளியேயும் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குவதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த பணி நள்ளிரவு வரை நடந்து அதிகாலை 4 மணியில் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் 4 அடுக்கு பாதுகாப்பு கொண்டு வரப்பட்டது.
இன்று முதல் அடுக்கில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும், 2-ம் அடுக்கில் தமிழ்நாடு பட்டாலியன் போலீசாரும், 3-ம் அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், 4-ம் அடுக்கில் உள்ளூர் போலீசார் என 400 போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் தீ போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வீரர்களும் வாகனங்களுடன் முன்னெ ச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நாளைமறுநாள் (சனிக்கி ழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணி க்கை தொடங்குகிறது. முதலில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்படு கிறது. 14 மேஜைகளில் 17 சுற்றுகள் வரை எண்ணப்ப டுகிறது. அன்று மதியம் முடி வுகள் அறிவிக்கப்படுகிறது.