நீர்வழி ஆக்கிரமிப்பு பற்றி இ.பி.எஸ். பேசுவது அண்ணாந்து பார்த்து துப்பிக்கொள்வது போலாகும் - அமைச்சர் காட்டம்
- நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
- பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் துவாரகாபுரி கிராமத்தில் மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிருபவர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், புயல் காரணமாக 3 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வேளாண் பயிர் நீரால் முழுங்கி நாசமாகி உள்ளது. வேளான் துறை அதிகாரிகள் பாதிப்பு குறித்து நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விலை நிலத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இழப்பீடு குறித்து முதலமைச்சர் அறிவித்து உள்ளார். கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு இழப்பீடு வழங்கப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது. அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. நீர்வழி ஆக்கிரமிப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அண்ணாந்து பார்த்து துப்பிக்கொள்வது போலாகும். வெள்ள பாதிப்பு குறித்து குற்றம் சாட்டினால் அந்த பாதிப்புக்கு முழு பொறுப்பு அவர்கள் தான். காரணம் 10 ஆண்டுகள் அவர்கள் தான் ஆட்சியில் இருந்தனர். தற்போது நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது. அவர்கள் நேரடியாக பார்வையிட்ட பின் பாதிப்பு குறித்து கூறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.