தமிழ்நாடு

தண்டனை கைதிகளை வைத்து நிர்வாக பணியை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை- ஐகோர்ட்

Published On 2025-02-01 13:20 IST   |   Update On 2025-02-01 13:20:00 IST
  • அரசு ஊழியர்கள் ஊதியத்தை வாங்கிக் கொண்டு சிறை கைதிகளை வைத்து வேலை வாங்குவது எப்படி நியாயமாகும்?’ என்று கேள்வி எழுப்பினர்.
  • மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை:

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற கோதண்டன் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு 30 நாட்கள் விடுப்பு வேண்டும் என்று புழல் சிறைத்துறை அதிகாரியிடம் விண்ணப்பம் செய்தார். ஆனால் 3 ஆண்டுகள் தண்டனையை முடித்தால் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் என்று கூறி கோதண்டனின் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோதண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் அக்ஷயா ஆஜராகி, 'மனுதாரர் சிறையில் ஒழுக்கமாக உள்ளார். அவர் சிறை துறையில் அதிகாரிகளுக்கு உதவியாக அலுவலக பணிகளையும் செய்து வருகிறார். அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் சிறை அதிகாரிகள் சுமக்கவில்லை. அதனால் அவருக்கு விடுப்பு வழங்க வேண்டும்' என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், 'பொதுவாக தண்டனை கைதிகளுக்கு சிறையில் பணி வழங்கப்படும். சமையல் உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்வார்கள். ஆனால் கைதி கோதண்டன் அதிகாரிகள் செய்யும் அலுவல் பணியான நிர்வாக பணியை செய்வதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் ஊதியத்தை வாங்கிக் கொண்டு சிறை கைதிகளை வைத்து வேலை வாங்குவது எப்படி நியாயமாகும்?' என்று கேள்வி எழுப்பினர்.

அரசு தரப்பில், இது குறித்து விசாரித்து உறுதி செய்வதாக கூறப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, 'இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அவர்கள்தான் செய்ய வேண்டும். சிறையில் அலுவல் பணியை தண்டனை கைதியை கொண்டு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே தண்டனை கைதிகளை கொண்டு சிறை நிர்வாகப் பணி மேற்கொள்ளப்படவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இதன் பின்னரும் எதிர்காலத்தில் இதுபோன்ற புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர் மனுதாரர் கோதண்டனுக்கு 23 நாட்கள் விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News