தமிழ்நாடு

வேங்கைவயல் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

Published On 2025-02-01 16:28 IST   |   Update On 2025-02-01 17:08:00 IST
  • வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது.
  • புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வழக்கு.

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முதலில் வேங்கை வயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.

இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வேங்கைவயல் சம்பவம் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடு தடுப்பு சட்டத்தின் கீழ் வராது என சிபிசிஐடி வாதம் செய்தது. அதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News