ஈ.சி.ஆர். சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அதிமுகவை சேர்ந்தவர்: ஆர்.எஸ். பாரதி
- ஈ.சி.ஆர். சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
- பறிமுதல் செய்யப்பட்ட கார் அதிமுக-வின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பொய்யை பலமுறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
* திமுக ஆட்சியில் குற்றம் எங்கேயினும் நடைபெற்றால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* ஈ.சி.ஆர். சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அதிமுக-வை சேர்ந்தவர். அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் நீலகிரி அதிமுக செயலாளரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது.
* அதிமுக-வினர் செய்யும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் திமுக மீது எடப்பாடி பழனிசாமி போட்டுக் கொண்டிருக்கிறார்.
* அண்ணாநகர் சிறுமி விவகாரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் அதிமுக வட்ட செயலாளர்.
* தமிழ்நாட்டில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று இருக்கிறது என்றால், குற்றம் புரிந்தவர்கள் எல்லாம் அதிமுக-வைச் சேர்ந்தவர்கள்தான்.
* நான் சொல்வது தவறாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி என்மீது வழக்கு போடலாம். திமுக ஒரு குற்றச்சாட்டை சொல்கிறது என்றால் ஆதாரத்துடன்தான் சொல்லி பழக்கம்.
* ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றிக்குமேல் வெற்றி பெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
* இதை திசைதிருப்ப வேண்டும் என்பதற்காகவே, திட்டமிட்டு திமுக கொடியை பயன்படுத்துவது, அதிமுக-வினர் திமுக-வினர் என்ற மாறுவேடத்தில் புகுந்து தீய செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனரோ என்ற சந்தேகப்பட வைக்கிறது.
* இரு கார்கள் தொடர்பாக டீம் அமைத்து விசாரிக்கும் காவல்துறை கண்காணிப்போடு இருக்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.