4-ம் கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் த.வெ.க. தலைவர் விஜய்
- 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம்.
- 19 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சி தொடங்கி ஒர் ஆண்டு நிறைவு பெற இருப்பதை ஒட்டியும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையிலும் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பணிகளை மேற்கொண்டார். அதன்படி மாவட்ட அளவில் கட்சி பணிகளை செய்வதற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியை விஜய் உருவாக்கி வருகிறார்.
மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள்
அதனடிப்படையில் கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து நேற்று வரை 3 கட்டங்களாக தலா 9 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்தார்.
இந்த நிலையில் இன்று 4-வது 19 மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தில் நான்காம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, தென்காசி வடக்கு, திண்டுக்கல் மேற்கு, விருதுநகர் வடமேற்கு உள்ளிட்ட 19 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.