தமிழ்நாடு

பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை - தமிழ்நாடு முழுக்க இன்று ரமலான் நோன்பு தொடங்கியது

Published On 2025-03-02 07:21 IST   |   Update On 2025-03-02 07:21:00 IST
  • தமிழ்நாடு அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் ஆயூப் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
  • அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர்.

புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக உள்ளது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைபிடிப்பதை இஸ்லாமியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த புனித மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை காஜி டாக்டர் சலாகுத்தீன் ஆயூப் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதில், "ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29-ந்தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28.2.2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 2.3.2025-ம்தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது," என கூறப்பட்டது.

அந்த வகையில் இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். தமிழ்நாடு முழுக்க ரமலான் நோன்பு தொடங்கியதை அடுத்து நாகூர், மதுரை உள்பட மாநிலம் முழுக்க பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள். மேலும் திருக்குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

Tags:    

Similar News