தமிழ்நாடு

தேசிய கல்விக் கொள்கை: நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்- திமுக எம்பி வில்சன்

Published On 2025-02-16 14:43 IST   |   Update On 2025-02-16 14:43:00 IST
  • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.
  • மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

திமுக எம்.பி.வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததன் காரணமாக, PM Shri திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியானது மறுக்கப்பட்டு குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.

புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ஒன்றிய அரசு தனது அரசியல் கருத்துக்களையும், அழுத்தங்களையும், சித்தாந்தங்களையும் தமிழக அரசின் மீதும், தமிழக மாணவர்கள் மீதும் திணிக்க முயல்வதையே இது காட்டுகிறது.

இதன் மூலம் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பிற்கும் - ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கும் இடையேயான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

நாம் குழப்பமான மக்கள் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.

தமிழக மக்கள் நன்கு படித்தவர்கள், ஆணித்தரமானவர்கள், தெளிவான கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்டவர்கள். ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் முதலில் உங்கள் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

சில முடிவுகளை எங்கள் மீது திணிப்பது உங்கள் அரசாங்கத்தின் சூட்சமமான திட்டம் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறோம்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களே..

உங்களது குழப்பங்கள் அனைத்தையும் நான் தீர்த்து வைக்கிறேன்.

அரசியல் சாசனச் சட்டத்தின் 73-வது பிரிவின்படி ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளும் எப்போதும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவை அல்ல!

கொள்கைகளானது தன்னிச்சையானதாகவும், விசித்திரமானதாகவும், கற்பனையானதாகவும், சட்டவிரோதமானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், சட்டத்திற்கு முரணானதாகவும் இருக்கும் போது அல்லது மாநிலத்தின் சட்டங்கள், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றில் தலையிடும்போது அவை மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.

அந்த வகையில் அவற்றை மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

குறிப்பாக மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் மூலம் திணிக்கப்பட்ட இதுபோன்ற பல கொள்கைகளை தமிழக அரசு நிராகரித்துள்ளது என்பதை வரலாறு காட்டும் நிலையில், ஒன்றிய அரசு திணிக்கும் கொள்கைகளை தமிழக அரசு கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

மும்மொழிக் கொள்கையை திணிப்பது, 1937-ம் ஆண்டிலேயே தமிழகம் நிராகரித்த இந்தி திணிப்பை நினைவூட்டுகிறது.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டத்தில் ஒன்றிய அரசை திருத்தம் செய்ய வைத்ததோடு, இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழிகளாக காலவரையின்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது. இது இந்தியக் குடியரசில் தற்போதுள்ள கிட்டத்தட்ட காலவரையற்ற இருமொழிக் கொள்கையை நிறுவிட வழிவகுத்தது.

இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை எப்படி வேறுபட முடியும்.

1960 களில் ஒன்றிய அரசு அளித்த உத்தரவாதங்களை பலவீனப்படுத்த இது பின்வாசல் வழியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையா?

தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் இத்தகைய அரசியல் கருத்துக்கள், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தின் வலுவான கல்வி முறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் உயர்ந்த கல்வித் தரத்தையும், கல்வியில் மாநிலம் கொண்டுள்ள முன்னணி நிலையையும் அச்சுறுத்துவதாக இருப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். இரு மொழிக் கொள்கையைத் தாண்டி கூடுதல் மொழிகளைக் கற்பதை தமிழ்நாடு எதிர்க்கவில்லை.

ஆனால், தமிழக மக்களுக்கான சிறந்த கல்வி எது என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள மாநில சுயாட்சியில் டெல்லியில் அமர்ந்து கொண்டு தலையிடும் ஒருவரால் தீர்மானிக்கப்படக் கூடாது.

ஒன்றிய அரசு அளிக்கும் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல.. மாறாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும்.

எனவே, அத்தகைய நிதியின் பயன்பாட்டை பகுத்தறிவற்ற கொள்கைகளால் நிர்பந்திக்க முடியாது. கல்வியை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறோம்.

கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தச் செயல்களுக்கு எங்கள் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் அடிபணிய மாட்டார்.

ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்படும் நிதியானது நமது மாநிலத்திற்கும் நமது மாணவர்களுக்கும் உரித்தானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிதிகள் வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது.

மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களே, உங்களின் அரசியல் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது.

இந்த நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் அவற்றின் மீது சட்டப்படி எங்களுக்கு உரிமை உண்டு. இந்த நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News