மன்னார்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
- காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபடுகின்றனர்.
- தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது.
மன்னார்குடி:
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி சென்னை, திருவாரூரில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் (வயது 38) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபடுகின்றனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் அந்த இயக்கத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள், தடயங்கள் எதுவும் இருக்கின்றதா? என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போன்களையும் கைப்பற்றி, அதில் ஏதேனும் தகவல்கள் இருக்கின்றதா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்டில் ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது.
என்.ஐ.ஏ. சோதனையை யொட்டி பாபா பக்ருதீன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மன்னார்குடியில் காலை முதல் பரபரப்பான சூழல் நிலவுகிறது.