பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை
- தீபாவளியை சிரமமின்றி கொண்டாட ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
- பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்னரே ஊதியம் வழங்க வேண்டும். அதுபோல் பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்க அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றார்கள். பணிநிரந்தரம் செய்ய வேண்டி தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
தற்பொழுது பண்டிகை காலம் ஆதலால் பண்டிகைக்கு தேவையான பொருள்கள், புத்தாடைகள் வாங்க பண்டிகை முன்பணம் வழங்கவும், தீபாவளிக்கு முன்னதாக ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கையை வைத்துள்ளார்கள்.
அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை காலத்தில் கடன் வழங்கி அவற்றை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறையை போல் பகுதிநேர ஆசரியர்களுக்கும் அந்த சலுகையை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தீபாவளியை சிரமமின்றி கொண்டாட ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.