
ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழங்கக் கூடாது - 'பங்க்' உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவு
- அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
- வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலோனார் முறையாக ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரை பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்தும் வகையில் போலீசார் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை தீவிரப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
அதன்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இணைந்து, விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வருகிற ஏப். 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர்.
இதனை தீவிரமாக செயல்படுத்த பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர். இது தொடர்பாக அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் கூறியதாவது:-
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து விபத்துகளை குறைக்கும் முயற்சியாக வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பெட்ரோல் பங்க்குகளில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றால் பெட்ரோல் வழங்குவதில்லை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
முதற்கட்டமாக தற்போது திருவள்ளூர் நகர் பகுதிகளில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் 'நோ ஹெல்மெட், நோ பெட்ரோல்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாசகம் ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் பங்க்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வரும் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் போட்டு வந்தால் தான் பெட்ரோல் வழங்குவோம் என்று பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.