பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை- பொதுநல மனு தாக்கல்
- பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம்.
பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3-ந்தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இப்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.
இதைத் தொடர்ந்து நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க தொகை வழங்க கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுகிறது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.