பொங்கல் பரிசு தொகுப்பு- நாளை முதல் டோக்கன் வினியோகம்
- டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
- தினமும் காலையில் 100 பேர் பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3-ந்தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இப்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.
இதைத் தொடர்ந்து நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் வழங்கும் டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
தினமும் காலையில் 100 பேர் பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பை ரேசன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக அரசாணைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அனைத்து ரேசன் கடைகளுக்கும் பரிசுத் தொகுப்புகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
பரிசுத் தொகுப்பு வினியோக அட்டவணை விவரத்தை காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து ரேசன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இதில் எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசு தொகுப்பை வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.