சென்னையில் விட்டுவிட்டு மழை தொடரும்... பிரதீப் ஜான் கணிப்பு
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால் விட்டுவிட்டு மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் கனமழை வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலுக்கு சென்றபிறகு மழை குறையும். சென்னையில் பெரும்பாலான இடங்களில் 70 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியை ஃபெஞ்சல் புயலுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.