நாளை மகா தீபம்: திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது
- அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழங்கியபடி மலை ஏறி சென்றனர்.
- நாளை முதல் 11 நாட்கள் மகாதீபம் பிரகாசிக்கும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டது.
இன்று அதிகாலை அண்ணாமலையார் நந்திபகவான் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதன் பின்னர் 40 பேர் கொண்ட குழுவினர் அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு சென்றனர். கொட்டும் மழையில் நனைந்தபடி அவர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழங்கியபடி மலை ஏறி சென்றனர்.
மகா தீபம் ஏற்ற 1200 மீட்டர் துணியும், 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும் தயார் நிலையில் உள்ளது.
இந்த ஆண்டு மகா தீப தரிசனம் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக 14 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 25 தற்காலிக பஸ் நிலையங்கள், 116 கார் நிறுத்தும் மையங்கள், 95 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கிரிவல பக்தர்கள் இடையூறுகள் இன்றி கிரிவலம் செல்ல காவல்துறை சார்பில் 500 மீட்டருக்கு 6 பேர் நிறுத்தப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் கிரிவல பக்தர்களின் தாகம் தணிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம், கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி உள்ளது.
நாளை முதல் 11 நாட்கள் மகாதீபம் பிரகாசிக்கும். இந்த நாட்களில் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து 3400 சிறப்பு பஸ், 20 ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இன்றுமுதல் 2 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.