யாரை சரி கட்டுவதற்காக அமைச்சர் டெல்லி போகிறார் என்பது தெரியவில்லை- பிரேமலதா
- தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக, மிக கேள்விக்குறியாக உள்ளது.
- கேப்டன் விஜயகாந்த் கூறுவதைப் போல தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தாக வேண்டும்.
வேங்கிகால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலையில் இன்று ஒரு நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பார்வையிட உள்ளோம். மேம்பாலம் கட்டப்பட்ட 3 மாதத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகத்தில் நடக்கும் அவலங்கள் மற்றும் அனைத்து பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி திருவண்ணாமலையில் இன்று மாலை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக, மிக கேள்விக்குறியாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் முதல், விக்கிரவாண்டியில் பச்சிளம் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்ததாக கூறப்படுவது வரை சிறிய குழந்தைகள் முதல் பெரிய பெண்கள் வரை எந்த பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அரசு சட்ட ஒழுங்கை கையில் எடுத்து எல்லோருக்கும் பாதுகாப்பை உருவாக்கி தர வேண்டும். இது அரசின் கடமை. ஏற்கனவே உள்ள கட்சிக் கூட்டணியில் தே.மு.தி.க. தொடர்ந்து உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைந்தால் 234 பகுதிகளிலும் தே.மு.தி.க. கூட்டணி வெற்றி பெறும்.
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது மிகவும் காலதாமதம். இந்த சோதனை முன்கூட்டியே நடந்திருக்க வேண்டும். லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது. நானும் வேலூர் மாவட்டம் தான். அங்கு என்ன என்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரியும்.
யாரை சரி கட்டுவதற்காக அமைச்சர் டெல்லி போகிறார் என்பது தெரியவில்லை.
அந்த அளவிற்கு ஆளும் கட்சியில் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது.
அமைச்சர் வீட்டில் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து மக்களுக்கு "உள்ளங்கையில் நெல்லிக்கனியாய்" தெளிவுபடுத்த வேண்டும்.
சோதனையின் போது என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரிவதில்லை.
கேப்டன் விஜயகாந்த் கூறுவதைப் போல தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தாக வேண்டும். உப்பு தின்னவன் தண்ணி குடிக்க வேண்டும்.
லஞ்சம், ஊழல் மட்டுமின்றி கனிம வள கொள்ளை மற்றும் மணல் கொள்ளை தலைவிரித்து ஆடுகிறது. இதை தடுக்கக்கூடிய வகையில் இந்த சோதனை அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.