வரலாறு தெரியாத அரைவேக்காடுகளின் வாய்ச்சவடால்- சீமானுக்கு பேராசிரியர் அருணன் பதிலடி
- பெரியாரே ஒரு மண்தான் என்று சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- பல்லவர்-சோழர் காலத்தில்தான் பிராமணிய-சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான், "எதற்கெடுத்தாலும் பெரியார் மண்.. பெரியார் மண் என்று கூறுகின்றனர். ஆனால் பெரியாரே ஒரு மண்தான். இது சேர,சோழ, பாண்டிய மண், முத்துராமலிங்க தேவரின் மண், தீரன் சின்னமலையின் மண்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சீமானின் இக்கருத்துக்கு பேராசிரியர் அருணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், "இது பெரியார் மண் அல்ல, மூவேந்தர் மண் என்கிறார் ஒருவர். பல்லவர்-சோழர் காலத்தில்தான் பிராமணிய-சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது. தமிழருக்கும் தமிழுக்கும் பெரும் கேடு சூழ்ந்தது. அதை எதிர்த்து வலுவான களம் அமைத்தவர் பெரியாரே. வரலாறு தெரியாத அரைவேக்காடுகளின் வாய்ச்சவடாலில் ஏமாற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.