நாளை நடைதிறப்பு- சபரிமலையில் சன்னிதானம் முழுவதும் தூய்மை பணியில் ஊழியர்கள் மும்முரம்
- வருகிற ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
- நறுமணம் நிறைந்த பூக்கள், தூபதீபம், மஞ்சள், சந்தனம் புனிதநீர் தெளித்து பூஜை செய்யப்படும்.
கூடலூர்:
சபரிமலையில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கடந்த 26ம் தேதி வரை மண்டல காலத்திற்கான தொடர் வழிபாடுகள் நடைபெற்றன. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். கடந்த 26ம் தேதி மண்டல பூஜையுடன் கோவில் நடை சாத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நாளை (30ம் தேதி) மாலை நடை திறக்கப்படும். இந்நிலையில் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக அப்பாச்சிமேடு முதல் சன்னிதானம் வரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. பெரியநடை பந்தல், 18ம் படி வளாகம், மாளிகைபுரத்து அம்மன் கோவில், சன்னிதானம், இரும்பு நடைபாலம், அன்னதான மண்டபம், ஆயுர்வேத மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.
அதன்பின் தண்ணீரை பீய்ச்சி அடித்து குறுமணல், தூசிகள் முழுவதும் அகற்றப்பட்டன. இதில் பல்வேறு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். சன்னிதான சிறப்பு காவல் அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இதுகுறித்து தெரிவிக்கையில்,
மண்டல பூஜை நிறைவடைந்துள்ள நிலையில் சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் எதிர்மறையாற்றல், அசுத்தம் மற்றும் தோஷத்தை அகற்ற சுத்திகரன் என்னும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நறுமணம் நிறைந்த பூக்கள், தூபதீபம், மஞ்சள், சந்தனம் புனிதநீர் தெளித்து பூஜை செய்யப்படும். இப்பணிகள் அனைத்தும் இன்று (29ம் தேதி) மாலைக்குள் நிறைவு செய்யப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு வந்து தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாட்களில் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.