கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்களின் எதிர்ப்பு அலைகளை சந்திக்க வேண்டும்- செல்லூர் ராஜூ
- ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.
- தி.மு.க. கூட்டணியில் பயணம் செய்யும் கட்சிகள் மக்களின் எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
மதுரை:
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகர் மட்டும்தான் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என போலீஸ் கமிஷனர் பேட்டி கொடுக்கிறார். இதற்கு தி.மு.க. அரசின் அழுத்தம் தான் காரணம்.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது, வழக்கு போடுகிறார்கள். இதற்காக தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தி.மு.க. அரசை கண்டித்து இருக்கிறார். போராட்டம் நடத்தவில்லை என்றால் மக்களின் பிரச்சனையை எப்படி கொண்டு செல்ல முடியும் என பாலகிருஷ்ணன் கேள்வி கேட்டு உள்ளார்.
இதற்காக இது தோழமைக்கு அழகா? என்று முரசொலி பத்திரிகையில் பாலகிருஷ்ணனுக்கு பல கேள்விகளை கேட்டு கட்டுரை வந்துள்ளது. தி.மு.க. அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சொன்னார். அதன் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியும் அதையே சொல்கிறார்கள்.
ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. தி.மு.க.வினரின் குணத்தை மாற்ற முடியாது. சர்வாதிகாரியாக மாறி சவுக்கால் அடிப்பேன் என மு.க.ஸ்டாலின் சொன்னார், ஆனால் அன்பு சகோதரர் அண்ணாமலை தான் தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டார்.
மாணவி பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஞானசேகரன் தி.மு.க. அமைச்சர்களோடு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். மாலை நேரத்தில் பிரியாணி கடை வைத்து நடத்துகிறார். இரவு நேரத்தில் பாலியல் வன்கொடுமை, வீடு புகுந்து திருடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் பயணம் செய்யும் கட்சிகள் மக்களின் எதிர்ப்பலைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தி.மு.க. என்ற கப்பல் ஓட்டை கப்பல் ஆகிவிட்டது. எனவே அந்த கப்பலை மாலுமி எவ்வளவுதான் திறமையாக இருந்தாலும் கரை சேர்க்க முடியாது. தற்போது தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் ஜனநாயக பூர்வமாக குரல் எழுப்புகிறார்கள்.
தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் தட்டிக் கேட்கும் வல்லமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.