தமிழ்நாடு

தமிழக மக்கள் ஆதரவை அண்ணாமலை பெற முடியாது- செல்வப்பெருந்தகை

Published On 2025-03-18 12:25 IST   |   Update On 2025-03-18 12:25:00 IST
  • அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது.
  • அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதி கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பிரச்சனைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துமா ?

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் அமலாக்கத்துறையை தூண்டிவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆற்றல்மிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது. இதை எதிர்கொள்கிற பேராற்றலும், துணிவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.

தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால் அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News