தமிழ்நாடு

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எங்கே இருக்கிறது? அன்புமணி ராமதாஸ்

Published On 2025-03-18 14:40 IST   |   Update On 2025-03-18 14:40:00 IST
  • ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
  • இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காலை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News