பழமையான கோவில்களை சீரமைக்க ஆண்டு தோறும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது- அமைச்சர் சேகர்பாபு
- கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.
- ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான அன்பழகன் தனது தொகுதிக்குட்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி கோவிலில் திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா ? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-
உறுப்பினர் குறிப்பிட்டு உள்ள கோவிலுக்கு அடுத்த மாதம் 11-ந்தேதி பாலாபிஷேகம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆண்டு தோறும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதன்படி 2022- 2023-ம் ஆண்டில் ரூ.100 கோடியும் 2023-2024-ம் ஆண்டில் 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர உபயதாரர் நிதியாக ரூ.60 கோடியும் திருக்கோவில்கள் சார்பாக ரூ.70 கோடியும் கிடைக்கப் பெற்று மொத்தம் ரூ.430 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.
ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஏற்கனவே 100 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 70 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் 100 கோவில்கள் கும்பாபிஷேகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. சுவாமிமலையில் மின் தூக்கி சீரமைக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதில் உறுப்பினர் ஜவாஹிருல்லா உடன் நானும் பங்கேற்க உள்ளேன்.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.