இன்னும் தெர்மாகோல், தெர்மாகோல்னு ஓட்டுறாங்க... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை
- நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல- சட்டசபையில் அமைச்சர் பேச்சு.
- நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம்" என்று கூறினார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா "நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்" என என பதில் அளித்தார்.
ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதைத்தான் செய்தோம். தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
இன்றைய சட்டசபை நிகழ்வில் பேசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் "எனக்கு பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்களில் சைகளை பார்த்துதான் சபாநாயகர் செயல்படுகிறார்.
நடுநிலையாக இல்லை. அவர் ஆசிரியராக இருந்தவர். நான் கடைசி பெஞ்ச் மாணவன். என்னைப் போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு உதவ வேண்டும். இல்லையென்றால் உபத்ரவம் கூட கொடுக்காமல் இருக்கலாம். அதை செய்யல.
இன்னும் என்னை தெர்மாகோல், தெர்மாகோல்னு ஓட்டுறாங்க... இன்னைக்கு அமைச்சர்கள் எல்லாம் அதிகாரிகள் ஒரு திட்டத்தை சொன்னால் நேரில் சென்று பார்க்கிறார்கள். அதைபோன்று எங்களது மாவட்ட ஆட்சியாளர்கள், முதன்மை பொறியாளர் எங்களை அழைத்துச் சென்றார்கள். மக்களின் பிரச்சனைக்காக நான் சென்ற கலந்து இருக்கிறேன். அதுக்கு என்னங்க... இன்னும் ஓட்டிக்கிட்டு இருந்தால் என்ன அர்த்தம்" என்றார்.