தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் - தர்காவில் நாளை சிறப்பு வழிபாடு- செல்வப்பெருந்தகை

Published On 2025-02-05 12:44 IST   |   Update On 2025-02-05 12:44:00 IST
  • பா.ஜ.க. கொடியுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுத்தது யார்?
  • தமிழகத்தின் அமைதியை கெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தியில் கலவரத்தைத் தூண்டி, பாராளுமன்ற தேர்தலில் அங்கு படுதோல்வி அடைந்தார்கள். தற்போது, திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கு, வெளியூரில் இருந்து ஒரு கும்பலை வரவழைத்து மத கலவரத்தை உருவாக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

தீய சக்திகளுக்கு (பா.ஜ.க.) தமிழக அரசு மென்மையான போக்கை காட்டுகிறது. இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இதை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். தமிழக அரசு மிகவும் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும்.

தமிழக காங்கிரஸ் சார்பில் நாளை மாலை திருப்பரங்குன்றம் சென்று முருகன் கோவிலிலும் மற்றும் சிக்கந்தர் தர்காவிலும் சிறப்பு வழிபாடு செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அரசியல் என்பது வேறு, ஆன்மிகம் என்பது வேறு. தமிழக அரசு இதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும். முருகன் மிகவும் சக்திவாய்ந்த இறைவன். அவரிடம் பா.ஜ.க. வின் அரசியல் எடுபடாது.

பா.ஜ.க. கொடியுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுத்தது யார்?

அந்த காலத்தில் இருந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தின் அமைதியை கெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

இதை ஒரு போதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

எச். ராஜா, அண்ணாமலைக்கு ஆன்மிக வரலாறு தெரியாது. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள துலுக்க நாச்சியார் சிலையை எடுக்க முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயத்துல்லா, கீழனூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News