ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- ஆர்வமுடன் வாக்களித்த வட மாநிலத்தவர்கள்
- ஈரோடு கிழக்குத் தொகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.
- காலை முதலே வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மாநகராட்சி பகுதியை உள்ளடக்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பல தரப்பினர் வசித்து வந்தாலும் இங்கு வட மாநிலத்தவர்களுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அவர்கள் இங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எலெக்ட்ரிக் கடை, செல்போன் கடை ஆகியவற்றில் வேலை செய்து வருகின்றனர். சிலர் சொந்தமாக கார்மெண்ட்ஸ், ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், கோட்டை வீதி, புது மஜீத் வீதி போன்ற பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்று காலை முதலே வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.