உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையேற பொதுமக்களுக்கு அனுமதி

Published On 2025-02-05 12:25 IST   |   Update On 2025-02-05 12:25:00 IST
  • மொத்தம் 1,216 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

மதுரை:

திருப்பரங்குன்றம் மலை மீது உயிர்ப்பலியிட தடை விதிக்கக்கோரிய விவகாரம் தொடர்பாக நேற்று போராட்டம் நடத்த இந்து அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

மேலும் தைப்பூச விழா தொடங்க இருக்கும் நிலையில் அசாதாரண சூழல் ஏற்படும் என்றும் காரணம் கூறியிருந்தனர்.

இருந்தபோதிலும் இந்து முன்னணியின் அறப் போராட்ட காரணமாக மதுரை மாவட்டம் முழுவதி லும் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

போராட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும், மீறி வந்தால் அவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர்.

போராட்ட நாளான நேற்று கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோவிலுக்குள் பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு மட்டும் இன்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சியினரோ, இந்து அமைப்பினரோ செல்ல 2-வது நாளாக தடை விதித்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

அதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.

Tags:    

Similar News