சிங்கப்பூர், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்- 4 பேர் கைது
- பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மொத்தம் 1488 கிராம் ஆகும்.
- தங்கத்தை கடத்தி வந்த 4 பயணிகளையும் அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு அதிக அளவில் இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை பறிமுதல் செய்யும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது அறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் நேற்று சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்களில் பயணம் செய்த 4 பயணிகளின் நடவடிக்கைகளில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் டிக்கெட் பாக்கெட் மற்றும் கைப்பையில் 8 செயின் வடிவிலான தங்கத்தையும், 2 வளையல் வடிவிலான தங்கத்தையும் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மொத்தம் 1488 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.1.16 கோடி ஆகும். தங்கத்தை கடத்தி வந்த 4 பயணிகளையும் அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.